| ADDED : ஏப் 27, 2024 07:04 AM
பு.புளியம்பட்டி : பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில், 2.௦௭ லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதற்கிடையே கீழ்பவானி வாய்க்கால் கரையை ஒட்டியுள்ள கிணறு, ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதால், கடைமடைக்கு தண்ணீர் செல்வதில்லை என்று, விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கீழ்பவானி வாய்க்கால் கரையை ஒட்டி, 50 மீட்டருக்குள் அமைந்துள்ள கிணறு, ஆழ்குழாய் கிணறுகளுக்கு மின்வாரியம் வழங்கிய இணைப்புகளை துண்டிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வருவாய் துறை, நீர்வள துறை, மின்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர், போலீஸ் பாதுகாப்புடன் பவானிசாகரில் இருந்து சத்தியமங்கலம் வரை, கீழ்பவானி வாய்க்கால் கரையை ஒட்டி, 50 மீட்டருக்குள் அமைந்துள்ள கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளின் மின் இணைப்புகளை நேற்று துண்டித்தனர். மேலும் ஆயக்கட்டு பகுதியில் இருந்து தண்ணீரை உறிஞ்சி, ஆயக்கட்டு இல்லாத பிறபகுதிக்கு கொண்டு செல்லும் கிணறுகளின் மின் இணைப்புகளும் துண்டிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.