அதிர்ச்சி, சர்ச்சைகளை ஏற்படுத்திய பெருந்துறை டி.எஸ்.பி., இடமாற்றம்
ஈரோடு, பெருந்துறை டி.எஸ்.பி.யாக பணியாற்றிய கோகுல கிருஷ்ணன், கோவை மாநகர் காட்டூர் ரேஞ்ச் ஏ.சி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர் கொங்கு நகர் ரேஞ்ச் ஏ.சி., வசந்தராஜ், பெருந்துறை டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டி.ஜி.பி., சங்கர்ஜிவால் பிறப்பித்துள்ளார். சிவகிரி வயதான தம்பதி கொலை வழக்கு விசாரணை அதிகாரியாக பெருந்துறை டி.எஸ்.பி., செயல்பட்டார். குற்றவாளிகளை பிடித்ததற்காக முதல்வர் அழைத்து பாராட்டு சான்றிதழும் வழங்கினார். இந்நிலையில்தான் விசாரணை அதிகாரி பொறுப்பில் இருந்து டி.எஸ்.பி., விடுவிக்கப்பட்டு, ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் நியமிக்கப்பட்டார்.முன்னதாக சென்னிமலையில் நடந்த இருவேறு கொலை சம்பவங்களில் மூவர் கொலை செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய, 11 பேரை, பெருந்துறை டி.எஸ்.பி.,யாக இருந்த கோகுல கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆனால், சிவகிரி தம்பதி கொலை வழக்கில் கைதான மூவர், சென்னிமலையில் நடந்த இரு வேறு கொலை சம்பவங்களிலும் தாங்கள் ஈடுபட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள, 11 பேர் யார்? என்ற கேள்வி எழுந்து பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது. ஆனால், இதற்கான விடை கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் கோகுல கிருஷ்ணன், அவரது பதவி காலமான இரண்டு ஆண்டுக்கு முன்னதாக, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். போலீசாரோ, இது வழக்கமான இடமாற்றம்தான் என்றனர்.