ஈரோடு: ஈரோடு மாநகர் மற்றும் மாவட்டத்தில், முருகப்பெருமான் கோவில்களில், தைப்பூச விழா நேற்று களை கட்டியது.திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து வேலாயுத சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். நுாற்றுக்கணக்கானோர் காவடி எடுத்து, பல்வேறு பகுதிகளில் இருந்து, பாதயாத்திரையாக வந்தனர்.* மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கொங்கலம்மன் கோவிலில், தைப்பூச தேரோட்டம் நேற்று காலை, 8:45 மணிக்கு நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி சில இடங்களில் போக்குவரத்து மாற்றமும், சில மணி நேரம் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. * அந்தியூர், தேர்வீதியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தந்தைக்கு உபதேசம் செய்யும் முருகனாக பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். இதேபோல் ஆப்பக்கூடல் கணேச பாலதண்டாயுதபாணி கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது.* அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர், ரெட்டிபாளையம் சென்னிமலை தண்டாயுதபாணி கோவிலில், நேற்று காலை, 7:௦௦ மணி முதல், 8:௦௦ மணி வரை சிறப்பு அபிஷேகம், 9:௦௦ மணிக்கு சிறப்பு வழிபாடும் நடந்தது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்தும், காவடி சுமந்து வந்தும், பாலாபிஷேகம் செய்தும் வழிபட்டனர். இதேபோல் பவானி, பழனியாண்டவர் கோவிலில், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.* பெருந்துறை சோழீஸ்வரர் கோவிலுக்கு, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பால் குடம், பன்னீர் குடம், காவடி ஆட்டம் ஆடி ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. மாலையில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் திருவீதியுலா நடந்தது.* பவானி, கூடுதுறையிலிருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீர் எடுத்தும், காவடி எடுத்து சென்றும் முருகப்பெருமானை வழிபட்டனர். வைரமங்கலம் பழனியாண்டவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். * கோபி பச்சமலை முருகன் கோவிலில், தைப்பூச திருவிழா, மகன்யாச அபிஷேகத்துடன் அதிகாலை, 5:00 மணிக்கு துவங்கியது. காலை, 7:00 மணிக்கு திருப்படி திருவிழா, 8:00 மணிக்கு, காவடி அபிஷேகம், 108 பால்குட அபிஷேகம் நடந்தது. இதேபோல் பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், பால்குட அபிேஷகம், யாக சாலை பூஜை, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதன்பின் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு மாலை, 4:30 மணிக்கு நடந்தது. இதில் கோபி, முருகன்புதுார், வெள்ளாளபாளையம் பகுதி பக்தர்கள் பங்கேற்றனர்.