திருப்பதி லட்டு உணர்வுபூர்வமானது தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி
பவானி: ''திருப்பதி லட்டு என்பது உணர்வு பூர்வமானது. இதில் விரும்பத்தகாத பொருள் கலக்கப்பட்டிருப்பது வேதனைக்குரிய விஷயம். நன்கு விசாரித்து, யார் தவறு செய்தார்களோ, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்,'' என, பா.ஜ., தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார். ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் அருகே, பா.ஜ., சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது. இதில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடக்கும் நிலையில், கிருஷ்ணகிரியிலிருந்து நீலகிரி மாவட்டம் வரை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். காங்கிரசுக்கு இறுதியுரை எழுதிய தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, காமராஜர் ஆட்சி நடத்துவோம் என காங்கிரசார் கூறி வருகின்றனர். உண்மையில் காமராஜர் ஆட்சியை நாங்கள்தான் நடத்தி வருகிறோம்.தமிழகத்தில் ஊழல் இல்லாத வளர்ச்சி திட்டங்களை, காமராஜர் அறிவித்தது போல், பிரதமர் மோடியும் ஊழல் இல்லாத வளர்ச்சி திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.திருப்பதி லட்டு என்பது உணர்வு பூர்வமானது. இதில் விரும்பத்தகாத பொருள் கலக்கப்பட்டது வேதனைக்குரிய விஷயம். நன்கு விசாரித்து, யார் தவறு செய்தார்களோ, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மது ஒழிப்பு என்ற உயரிய கொள்கையை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், நாடகமாக்கி கொண்டுள்ளனர். ஸ்டாலினை மிரட்ட சென்ற திருமாவளவன், அவரை சந்தித்து மிரண்டு போய் வந்தார். இவ்வாறு தமிழிசை கூறினார்.