உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாரச்சந்தை அமைக்க கூடாது என திடீர் மிரட்டல் கண்டித்து வியாபாரிகள் மறியல்

வாரச்சந்தை அமைக்க கூடாது என திடீர் மிரட்டல் கண்டித்து வியாபாரிகள் மறியல்

ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, 52வது வார்டு ஷேக் தாவூத் வீதி உள்ளிட்ட வீதிகளில் திங்கட்கிழமை தோறும் சிறு வியாபாரிகள் சாலையோரம் காய்கறி, பழங்கள், தக்காளி உள்ளிட்ட பொருட்களை சந்தை போல் அமைத்து விற்பது வழக்கம். காலை, 10:00 மணி முதல் மாலை வரை சந்தை நடக்கிறது. நேற்று காலை, 11:15 மணியளவில் வாரச்சந்தை வியாபாரிகள் காந்திஜி சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. ஈரோடு டி.எஸ்.பி., முத்துகுமரன் தலைமையிலான போலீசார், வியாபாரிகளிடம் பேசி மறியலை கைவிட செய்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: இன்று காலை சந்தைக்கு வந்த சிலர், அடுத்த வாரம் முதல் இங்கு கடை போடக்கூடாது என்று கூறி சென்றனர். இங்கு, 250 பேர், 200 கடைகளை, 45 ஆண்டாக போட்டு வருகிறோம். இடையூறாக இருப்பதாக கூறி அடுத்த வாரம் முதல் வேறிடத்தில் கடை போடுங்கள். இதை கவுன்சிலர் கூறினார் என்று எங்களை சிலர் எச்சரித்து சென்றனர். இதனால்தான் மறியலில் ஈடுபட்டோம். இவ்வாறு கூறினர்.இதுகுறித்து தி.மு.க., கவுன்சிலர் சாந்தியின் கணவர் பாலாஜி கூறியதாவது: இப்பிரச்னை குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. வாரச்சந்தை அமைக்கப்படும் வீதிகளை சேர்ந்த மக்கள், இடையூறு இருப்பதாக மாநகராட்சியில் புகார் கடிதம் அனுப்பி இருக்கலாம். அதன் அடிப்படையில் ஊழியர்கள் வந்து சென்றிருக்கலாம். இவ்வாறு கூறினார். போலீசார், 10 வியாபாரிகளை மாநகராட்சி அலுவலகத்துக்கு பிரச்னை குறித்து பேச அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி