உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பூணுால் அறுப்பு சம்பவத்துக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு

பூணுால் அறுப்பு சம்பவத்துக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு

தாராபுரம்: நெல்லையில் வாலிபரின் பூணுாலை அறுத்த சம்பவம், தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழ்நாடு தேவேந்திரர் இளைஞர் பேரவை நிறுவனர் கணபதி குடும்பனார் கூறியதாவது: கடந்த அறுபது வருடங்களாக பிராமணருக்கு எதிரான செய்தியை, மக்களிடையே கொண்டு செல்வது, திராவிட இயக்கங்களின் வேலையாக உள்ளது. இது திட்டமிட்டு ஆரியத்தை எதிர்ப்பதாக, மக்களிடையே கொண்டு செல்லும் யுக்தியாகவே பார்க்கிறோம். பல கோவில்களில் எங்களுக்கு பிராமணர்கள் பரிவட்டம் கட்டி, எங்களது வரலாற்றை கூறும் இந்த வேளையில், பூணுால் அறுப்பு போன்ற சம்பவங்கள் இனி நடந்தால், தேவேந்திர குல மக்கள், பிராமணர்களுக்கு பாதுகாப்பாக நிற்பார்கள் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறிக் கொள்கிறோம். மத்திய, மாநில அரசுகள் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பிள்ளைமார் அமைப்பு தாராபுரம் வ.உ.சி., பேரவை நிர்வாகி மணிகண்டன் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு இன, மொழி, மதம் சார்ந்த மக்கள் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நெல்லையில் சிறுவன் மீது, அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி, பூணுாலை அறுத்த சம்பவம், கண்டிக்கத்தக்கது. கலவரத்தை உருவாக்கும் நோக்கில் செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம். அராஜகம் செய்த நபர்களை தமிழக அரசு கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி