கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கும் 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 17 பேர் வேலுார் சரகத்திற்கு மாற்றம் செய்து வடக்கு மண்டல ஐ.ஜி., அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 67 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்போதைய எஸ்.பி., சமய்சிங்மீனா உட்பட 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கலெக்டர் ஷ்ரவன்குமார் மாற்றப்பட்டார்.மேலும், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியது, தகவல் அளிக்காதது, சாராய வியாபாரிகளிடம் தொடர்பில் இருந்தோர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.அதில், கள்ளச்சாராய விற்பனையை கண்காணிக்க தவறிய மற்றும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்ட தனிப்பிரிவை சேர்ந்த இன்ஸ்பெக்டர் சண்முகம், கள்ளக்குறிச்சி உட்கோட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், போலீசார்கள் கச்சிராயபாளையம் கணேசன், சங்கராபுரம் சிவஜோதி, சின்னசேலம் சரவணன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கும், கரியாலுார் பிரபு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.மேலும் திருக்கோவிலுார் உட்கோட்ட தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், போலீசார்கள் சந்திரன், மின்னல் ஒளி, சட்டம் - ஒழுங்கு பிரிவு கள்ளக்குறிச்சி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் கருப்பையா, வெங்கடேஷ், போலீசார் பழனிவேல், ராஜி, மதுபாலன், வேலுமணி, ஏழுமலை, வரஞ்சரம் கண்ணன், சின்னசேலம் பாலாஜி, சங்கராபுரம் சக்திவேல், புருஷோத்சிங், செந்தில்குமார், கள்ளக்குறிச்சி தனிப்பிரிவு போலீஸ்காரர் பாலசுப்ரமணியம் ஆகியோரை வேலுார் சரகத்திற்கு மாற்றம் செய்து வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்சரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.