| ADDED : மே 24, 2024 03:53 AM
கள்ளக்குறிச்சி: ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக 37 பேரிடம் ரூ.33.89 லட்சம் மோசடி செய்த பா.ஜ., மாஜி பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டை சேர்ந்தவர் சிவக்கொழுந்து மகன் விநாயகமூர்த்தி,40; பா.ஜ., முன்னாள் மாநில இளைஞரணி துணை தலைவர். இவர், கடந்த 2019ம் ஆண்டு தனக்கு அறிமுகமான கள்ளக்குறிச்சி மாவட்டம், பகண்டை கூட்ரோட்டை சேர்ந்த அப்பு மகன் ரவி,39; மற்றும் பெருவங்கூரை சேர்ந்த சோலை மகன் நடராஜன் ஆகியோரிடம், ரயில்வே துறையில் சேலம் டிவிஷனில் 35 காலியிடம், கிஷான் ரேஷன் ஷாப்பிங்கிற்கு 2 காலியிடம் இருப்பதாகவும், ஒரு நபருக்கு ரூ.1.5 லட்சம் கொடுத்தால் ஒரே மாதத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார். அதனை நம்பி இருவரும் தங்களுக்கு தெரிந்த 37 பேரிடம் ரூ.33.89 லட்சத்தை வாங்கி கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி விநாயகமூர்த்தியிடம் கொடுத்தனர். அன்று இரவு 7:00 மணிக்கு விநாயகமூர்த்தி ரயில்வே அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்துள்ளதாக கூறி, சேலம் டிவிஷன் ஆபிஸ் என, முத்திரையிட்ட விண்ணப்ப நகலினை காட்டினார்.அதன்பின் பணம் கொடுத்த நபர்களை விநாயகமூர்த்தி மூன்று குழுக்களாக பிரித்து கேரளா, டில்லி மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நேர்காணலுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை.சந்தேகமடைந்த ரவி, நடராஜன் ஆகியோர் சேலம் ரயில்வே டிவிஷன் அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது எவ்வித காலியிடமும் இல்லை என்பதும், விநாயகமூர்த்தி காட்டியது போலி முத்திரையிட்ட விண்ணப்பம் என, தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து பணத்தை திரும்ப கேட்ட இருவரையும், விநாயகமூர்த்தி அவரது உதவியாளர் பாலா ஆகியோர் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, விநாயமூர்த்தியை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாலாவை தேடி வருகின்றனர்.