| ADDED : ஜூலை 22, 2024 11:49 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மாலையுடன் மனு அளிக்க வந்த நபரால் பரபரப்பு நிலவியது.உளுந்துார்பேட்டை அடுத்த எஸ்.மலையனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ராமர், 34; இவர், நேற்று மனு அளிக்க மாலையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.இதைப்பார்த்த டி.எஸ்.பி., தேவராஜ், இன்ஸ்பெக்டர் ராபின்சன் ஆகியோர் மனு அளிக்க வந்த ராமரிடம் விசாரித்தனர்.அப்போது அவர் கூறுகையில், 'எஸ்.மலையனுார் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்டதாலும், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் நடந்த ஊழல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டதாலும் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட சிலர் என்னை தாக்கினர்.இது குறித்து எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு புகாரினை நிராகரித்து விட்டனர். இதுவரை நான் கொடுத்த 3 புகார்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, எனது மனு மீது விசாரணை செய்யும் அலுவலருக்கு, கலெக்டர் மூலமாக மாலை அனுப்ப மனுவுடன் வந்தேன்' என்றார்.தொடர்ந்து ராமரிடம் இருந்த மாலையை போலீசார் பெற்று, மனு அளிக்க செல்லுமாறு தெரிவித்தனர். இதனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.