| ADDED : மே 30, 2024 06:21 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று(30ம் தேதி) துவங்குகிறது. கல்லுாரி முதல்வர் முனியன் விடுத்துள்ள செய்திகுறிப்பு; கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இளங்கலை மற்றும் இளம்நிலை பாடப்பிரிவுகளில் சேர்கை பெற 9,742 மாணவர்கள் விண்ணப்பத்துள்ளனர். இதில் தமிழ் துறைக்கு 2579, ஆங்கிலம் 1411. வணிகவியல் 1095, கணினி அறிவியல் 1738, வேதியியல் 1627, இயற்பியல் 759, கணிதம் 533 பேர் விண்ணப்பித்துள்ளனர்.இன்று(30ம் தேதி) காலை 10.00 மணிக்கு சிறப்பு பிரிவு மாணவர்கள்( மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், என்.சி.சி, மற்றும் விளையாட்டு துறை) போன்ற மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இதனைத் தொடர்ந்து பொது பிரிவு மாணவர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 10ம் தேதி காலை 10 மணிக்கு பி.ஏ. தமிழ், பி.காம் (வணிகவியல்) மற்றும் பி.எஸ்.சி கணினி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு நடக்கிறது. வரும் ஜூன் 11 ம் தேதி பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்.சி வேதியியல், இயற்பியல், கணிதம் ஆகிய பாடபிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 24 மற்றும் 25 ம் தேதி நடக்கிறது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கை உறுதி செய்யப்படும். அரசின் இட ஒதுக்கீடு மற்றும் தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். கல்லுாரியின் மூலமாக மொபைல், மெயில், வாட்ஸ்ஆப், எஸ்.எம்.எஸ்., மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். அம்மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களை எடுத்து வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.