| ADDED : மே 13, 2024 06:07 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் மனநிலை பாதித்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்து குணமடையச் செய்து அவரது உறவினர்களிடம், போலீசார் ஒப்படைத்தனர்.உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அருகே 43 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சுற்றி வந்தார். இதனை அறிந்த உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் பெண் போலீஸ்காரர்களான சிவயரசி, சுதா ஆகியோர், மனநலம் பாதித்த பெண்ணை கடந்த மார்ச் 5ம் தேதி மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆதரவற்றோர் மனநல பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 2 மாதங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்தார். பின் அந்தப் பெண்ணிடம் விசாரணை செய்த போது, அவர் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த சத்யா என்கிற நித்தியா, 43; என தெரிய வந்தது.அதன்பேரில் போலீசார் அவரது முகவரியை அறிந்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து சத்யாவை ஒப்படைத்தனர்.மனநலம் பாதிக்கப்பட்டவரை குணமடைய செய்து தங்களிடம் ஒப்படைத்த போலீசாருக்கு அவர்கள் நன்றியை தெரிவித்தனர்.