| ADDED : மே 28, 2024 06:20 AM
கள்ளக்குறிச்சி : விதைப்பண்ணை வயல்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருக்கோவிலுார் வட்டாரத்தில் நெல், மணிலா, வரகு, கம்பு, உளுந்து, எள் போன்ற பயிர்களுக்கான விதை பண்ணை அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து விதை கொள்முதல் செய்யப்படுகிறது. பூச்சி, நோயற்ற மற்றும் விதை நேர்த்தி செய்யப்பட்ட சான்று பெற்ற தரமான விதைகளை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, மீண்டும் விவசாயிகளிடம் இருந்து விதை கொள்முதல் செய்யப்படுகிறது. வேளாண் விதை பண்ணை வயல்களை வேளாண்மை துணை இயக்குனர்(திட்டம்) பெரியசாமி, திருக்கோவிலுார் அடுத்த டி.கீரனுார் கிராமத்தில் விவசாயிகள் நவநீதகிருஷ்ணன், பழனிவேல் ஆகியோரது வயலை ஆய்வு செய்து தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கினர். அப்போது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்(பொ) கிருஷ்ணகுமாரி, துணை வேளாண்மை அலுவலர், உதவி விதை அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.