| ADDED : ஜூலை 22, 2024 01:10 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிலை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், பணி முன்னேற்றம் குறித்து துறை வாரியாக அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும், மாவட்டத்தில் நடந்து வரும் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து, மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம், குறைகேட்புக் கூட்டம், முதல்வரின் முகவரி துறை உள்ளிட்ட பல்வேறு முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், மனுக்கள் தீர்வு, நிலுவை உள்ளிட்டவைகள் குறித்து துறை வாரியாக அலுவலர்களிடம் தனித்தனியாக கேட்டறிந்தார்.மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில், நிலுவை மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. எனவே, மக்கள் நலத்திட்டங்கள் பயனாளிகள் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.கூட்டத்தில் எஸ்.பி., ரஜத் சதுர்வேதி, டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.