| ADDED : ஜூலை 10, 2024 05:13 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்தவர் இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக, அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மறுவாழ்வு மைய உரிமையாளர் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த குச்சிப்பாளையம், ஐயப்பன் நகரில், லோட்டஸ் பவுண்டேஷன் சார்பில், குடிபோதை சிகிச்சை மறுவாழ்வு மையம் மற்றும் மனநல மருத்துவமனை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் காமராஜ், 54.ஜா.சித்தாமூரை சேர்ந்த பொன்முடி மகன் ராஜசேகர்,38; கடந்த 5ம் தேதி முதல் இங்கு சிகிச்சையில் இருந்து வந்தார். மேலும் 25 பேர் இங்கு சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில் கடந்த 8ம் தேதி அதிகாலை உடல்நிலை சரியில்லை எனக்கூறி ராஜசேகரை மறுவாழ்வு மைய ஊழியர்கள் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.தகவல் அறிந்த மணலுார்பேட்டை போலீசார் ராஜசேகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து ராஜசேகர் மனைவி ராஜாமணி கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரணம் பிரிவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், ராஜசேகரின் உடலில் காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் பாலாஜி, மணலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், கடுமையாக தாக்கப்பட்டதால் ராஜசேகர் உயிரிழந்தது தெரிய வந்தது.அதையடுத்து, மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் திருக்கோவிலுாரை சேர்ந்த காமராஜ், 54; சிகிச்சை பெற்று வந்த சந்தைப்பேட்டையை சேர்ந்த ஷமீர் மகன் ஜமால், 30; விளந்தையை சேர்ந்த ஆனந்தராஜ், 32; மையத்தின் ஊழியர்கள் மணம்பூண்டியை சேர்ந்த பிரவீன்குமார், 26; திருப்பாலபந்தலை சேர்ந்த எத்திராஜ், 43; சந்தப்பேட்டையை சேர்ந்த கவுல்பாட்ஷா, 44; ஆகியோர் மீது கொலை வழக்கு பதிந்து, 6 பேரையும் கைது செய்தனர்.இதனைத் தொடர்ந்து எஞ்சிய 23 பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களுக்கு மனநல ஆலோசனை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமாக உள்ளனர் அவர்களின் உறவினர்கள் வந்தவுடன் அவர்களிடம் ஒப்படைக்கப்படுவர் என மருத்துவமனை டீன் நேரு தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, போலீசார் முன்னிலையில், குலதீபமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜ் மறுவாழ்வு மையத்தை பூட்டி 'சீல்' வைத்தார்.