உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி; நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் பரிதாபம்

ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி; நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் பரிதாபம்

விருத்தாசலம் : கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து கீழே விழுந்த 7 மாத கர்ப்பிணி் இறந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ., விசாரித்து வருகின்றனர்.தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அடுத்த மேலநீலிதநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் இவர், தனது குடும்பத்துடன் சென்னை, திரிசூலம் பெரியார் நகரில் வசித்து வருகிறார். இவரது மனைவி கஸ்துாரி,20; திருமணமாகி 9 மாதமாகும் நிலையில் கஸ்துாரி ஏழு மாத கர்ப்பமாக இருந்தார்.இந்நிலையில், நேற்று சொந்த கிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழா மற்றும் நாளை (5ம் தேதி) கஸ்துாரிக்கு நடக்க இருந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்காக, நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில், எஸ் 9 கோச்சில் கஸ்துாரி மற்றும் உறவினர்கள் 11 பேர் தென்காசிக்கு புறப்பட்டனர்.பயணத்தின்போது கர்ப்பிணியான கஸ்துாரிக்கு திடீர் வாந்தி ஏற்பட்டதால், கோச்சில் இருந்த வாஷ் பேஷனுக்கு சென்று வாந்தி எடுத்துவிட்டு, களைப்பில் அருகில் இருந்த கதவில் சாய்ந்திருந்தார். அப்போது, கதவு காற்றில் கஸ்துாரி மீது இடித்ததில் நிலைதடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்தார்.அதனைக் கண்டு திடுக்கிட்ட உறவினர்கள் கூச்சலிட்டபடி ரயிலில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ஆனால் அதிவேகத்தில் சென்ற ரயில் 8 கி.மீ., துாரம் உள்ள கோ.பூவனுார் ரயில் நிலையத்தில் நின்றது. அங்கு இறங்கிய உறவினர்கள் கதறியபடி கஸ்துாரியை தேடினர். 15 நிமிடம் தேடியும் கஸ்துாரி கிடைக்காத நிலையில் ரயில் புறப்பட்டு, 20 நிமிடம் தாமதமாக விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனுக்கு வந்தது.அங்கு, கஸ்துாரியின் உறவினர்கள் கதறியபடி ரயில்வே போலீசாரிடம் முறையிட்டனர். ரயில்வே போலீசார் கஸ்துாரியின் உறவினர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று கஸ்துாரியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.மூன்றரை மணி நேர தேடுதலுக்கு பின் இரவு 11:00 மணி அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை அடுத்த பூ.மாம்பாக்கம் அருகே கஸ்துாரியை இறந்த நிலையில் கண்டுபிடித்தனர்.கஸ்துாரி உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்த கர்ப்பிணியான கஸ்துாரி தவறி விழுந்தாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.விருத்தாசலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடத்திய திருச்சி மண்டல ரயில்வே இரும்புபாதை டி.எஸ்.பி., செந்தில்குமரன் கூறியதாவது:கஸ்துாரிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால், ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது. சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்துள்ளதால், திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., விசாரணை நடத்த வேண்டும். அவர் விசாரணையை துரிதப்படுத்த, விருத்தாசலம் ஆர்.டி.ஓ.,விற்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதன்பேரில், நேற்று 12:00 மணிக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் நேரில் சென்று விசாரித்தார்.அதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை முடித்து, கஸ்துாரியின் உடலை மாலை 3:30 மணிக்கு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின், ஆம்புலன்ஸ் மூலம் கஸ்துாரி மற்றும் அவரது வயிsfறில் இருந்த 7 மாத சிசுவின் உடல்களை சென்னைக்கு கொண்டு சென்றனர்.

4 ஆண்டில்87 பேர் பலி

கடந்த 2020ம் ஆண்டு முதல் கடந்த பிப்ரவரி 2024ம் ஆண்டுவரை திருச்சி உட்கோட்ட பகுதிகளில் மட்டும் 87 பேர், ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளனர். இதில், கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் 42 பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அபாய சங்கிலி செயலிழப்பு

ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் தவறி விழுந்ததும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ஆனால் அது செயல்படுதால் 8 கி.மீ., துாரம் சென்று இரவு 8:35 மணியளவில் மேப்புலியூர் அருகே நின்றது. அபாய சங்கிலி செயல்பட்டு ரயில் நிறுத்தப்பட்டிருந்தால் கஸ்துாரியை காப்பாற்றி இருக்கலாம் என உறவினர்கள் கதறி அழுதனர்.இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை