தீபாவளி பண்டிகையொட்டி 600 போலீசார் பாதுகாப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையொட்டி ஏ.டி.எஸ்.பி., தலைமையில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை நாளை 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை உள்ளிட்ட பகுதியில் பொதுமக்கள் புத்தாடை வாங்குவதற்கும், பட்டாசுகள் வாங்குவதற்கும் ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் நகர பகுதியில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால், குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், கடை வீதிகளில் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைத்து, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏ.டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் 6 டி.எஸ்.பி.,க்கள், 18 இன்ஸ்பெக்டர்கள், 114 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், 340 காவல் நிலைய போலீசார், 40 ஆயுதப்படை போலீசார், 60 பட்டாலியன் போலீசார் உட்பட மொத்தம் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் போக்குவரத்து போலீசாருடன், சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் இணைந்து போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி மேற்கொண்டுள்ளனர். அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்வதைத் தடுக்கும் பொருட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.