கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 4,392 ஆண்கள், 4,794 பெண்கள், 2 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 9,188 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கள்ளக்குறிச்சி(தனி), ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த கெங்கைவல்லி(தனி), ஆத்துார்(தனி), ஏற்காடு(எஸ்.டி) ஆகிய 3 சட்டசபை தொகுதிகளும் உள்ளன. கடந்த ஜன., மாதம் 22ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் நிலவரப்படி, கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் 7,68,729 ஆண்கள், 7,89,794 பெண்கள், 226 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 15 லட்சத்து 58 ஆயிரத்து 749 வாக்காளர்கள் இருந்தனர்.இந்நிலையில், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களை வாக்காளர்களாக இணைக்க மார்ச் 27ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ஆன்லைன் மூலம் இளைஞர்கள் பலர் விண்ணப்பித்தனர். பெறப்பட்ட விண்ணப்பங்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் சரிபார்த்து, செயலி மூலமாகவே சமர்ப்பித்த நிலையில், புதுப்பிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் 7,73,212 ஆண்கள், 7,94,588 பெண்கள், 228 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 15 லட்சத்து 67 ஆயிரத்து 937 வாக்காளர்கள் உள்ளனர். அதாவது, 4,392 ஆண்கள், 4,794 பெண்கள், 2 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 9,188 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இதில், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் 416 பேர், மாற்றுத்திறனாளிகள் 16,103 பேர் மற்றும் 85 வயது மேற்பட்ட முதியவர்கள் 11,199 பேர் உள்ளனர்.