நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு கட்டுப்படுத்த ஆலோசனை
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெற்பயிரில் காணப்படும் இலை சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.மாவட்ட வேளாண் இயக்குனர் அசோக்குமார் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 44,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர்.மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன் தலைமையிலான குழுவினர் சிறுநாகலுார் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது நெல் வயலில் இலை சுருட்டு புழு தாக்குதல் இருப்பது தெரிய வந்தது.காலநிலை மாற்றம் காரணமாக மாவட்டத்தில் ஆங்காங்கே இலை சுருட்டு புழு தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதனை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மூலம் கட்டுப்படுத்த வேண்டும். வேப்பங்கொட்டை சாறு 5 அல்லது இலுப்பை எண்ணெய் அல்லது அசாடிராக்டின் அல்லது குளோரோடேரேனிலிபுருள் அல்லது பிப்ரோனில் அல்லது குளோர்பைரிபாஸ் மருந்துகளை தெளித்து இப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என அறிவுறுத்தினார்.