உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பு குறைகிறது: மாற்றுப்பயிர் சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்

மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பு குறைகிறது: மாற்றுப்பயிர் சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்

தியாகதுருகம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரும்பு அறுவடைக்கு கூலி ஆட்கள் கிடைப்பதில் சிக்கல், கோடை காலத்தில் வறட்சியால் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு ஆகிய காரணங்களால் கரும்பு சாகுபடியை தவிர்த்து மாற்றுப் பயிர் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முன்னிலை வகிக்கிறது. சராசரியாக 16.75 சதவீதம் கரும்பு இங்கு விளைவிக்கப்படுகிறது. மாவட்டத்தில் கரும்பு பயிரிடாத கிராமங்களே இல்லை என்று சொல்லலாம்.நடவு செய்யப்பட்ட கரும்பு விளைந்து அறுவடை பருவம் வரை பராமரிப்பது மிக எளிது.ஆண்டு பயிர் என்பதால் அறுவடை செய்து ஆலைகளுக்கு அனுப்பி ஒரே தருணத்தில் நிகர லாபம் பெற முடியும்.இதன் காரணமாக விவசாயிகள் ஆர்வத்துடன் கரும்பு சாகுபடி செய்கின்றனர். ஆண்டு முழுவதும் தண்ணீர் பாய்ச்சி பராமரித்தால் மட்டுமே கரும்பு சாகுபடியில் லாபம் ஈட்ட முடியும்.கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை சீராக பெய்யாமல் ஏமாற்றுவதால் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணற்று நீர்ப்பாசனம் கை கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறது. கடந்த மாதம் கடும் கோடை வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் கரும்பு பயிர்கள் கருகி சேதமடைந்தது.இதற்கு சொட்டு நீர் பாசன முறையை கரும்பு வயலில் அமைத்தால் மட்டுமே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயிரைக் காப்பாற்ற முடியும். இதற்காக அரசு மானிய விலையில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கான கருவிகளை கொடுத்தாலும் பெரு விவசாயிகள் மட்டுமே இதனை செயல்படுத்தி பயனடைகின்றனர்.அதேபோல் கரும்பு அறுவடைக்கு வேலையாட்கள் கிடைப்பதில் கடும் சிக்கல் நிலவுகிறது. இதனால் அறுவடைக்கு 3 மாதத்திற்கு முன்பே முன்பணம் கொடுத்துவிட்டு விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.அப்படி இருந்தும் குறித்த தருணத்தில் ஆட்கள் வராமல் இழுத்தடிப்பதால் கரும்பை அறுவடை செய்யும் பருவம் தவறி எடை குறைந்து நஷ்டம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக கரும்பு அறுவடைக்கு இயந்திரத்தை பயன்படுத்தும் முறையை வேளாண்துறையினர் ஊக்கப்படுத்த வேண்டும். வயலில் இயந்திரங்கள் சென்று அறுவடை செய்வதற்கு ஏற்றவாறு மீட்டர் பார் முறையில் கரும்பு நடவு செய்ய வேண்டும்.மாவட்டத்திலுள்ள 90 சதவீத விவசாயிகள் பாரம்பரிய முறைப்படியே கரும்பு நடவு செய்கின்றனர். இதிலிருந்து அவர்களை மீட்டர் பார் நடவு முறைக்கு மாற்ற வேளாண்துறையினர் உரிய முயற்சி எடுத்தால் மட்டுமே அறுவடைக்கு ஆட்களை நம்பி இருக்காமல் இயந்திரத்தை பயன்படுத்தி குறித்த பருவத்தில் கரும்பை அறுவடை செய்து பயனடைய முடியும். ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதும் அறுவடைக்கு ஆட்கள் கிடைப்பதிலும் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதால் விவசாயிகள் கரும்பு சாகுபடியை தவிர்த்து மாற்றுப் பயிர் செய்வதில் கவனம் திரும்பியுள்ளது.இதன் எதிரொலியாக கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளம் சாகுபடி பரப்பு மாவட்டத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ