சப் இன்ஸ்பெக்டர் பதவி எழுத்து தேர்வு மாவட்டத்தில் 2,519 பேர் எழுத ஏற்பாடு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை 21ம் தேதி நடக்கும் சப்இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வுக்கு 2,519 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து எஸ்.பி., மாதவன் விடுத்துள்ள செய்திகுறிப்பு; தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 2025ம் ஆண்டிற்கான சப்இன்ஸ்பெக்டர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்து தேர்வு நாளை 21ம் தேதி நடக்கிறது. மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் அமைத்துள்ள 2 தேர்வு மையங்களில், 1,924 ஆண்கள், 595 பெண்கள் என மொத்தம் 2,519 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்கும் தேர்வாளர்கள் காலை 9.30 மணிக்குள் வர வேண்டும். அதற்கு மேல் வந்தால் அனுமதி கிடையாது. காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை முதன்மை எழுத்து தேர்வும், பிற்பகல் 3.30 மணி முதல் 6.10 மணி வரை தமிழ்மொழி தகுதி தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டு நர் உரிமம் உள்ளிட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். மொபைல், ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அனுமதி கிடையாது. மேலும், முதன்மை எழுத்து தேர்வு முடித்தவுடன் தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாது. பிற்பகல் நடக்கும் தமிழ்மொழி தகுதி தேர்வு முடிந்த பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படும். தேர்வு மையத்தில் ஏற்பாடு செய்துள்ள உணவகத்தில் பணம் மட்டுமே செலுத்தி உணவு மற்றும் திண்பண்டங்கள் பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு அனுமதி இல்லை. மேலும் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து தேர்வு மையமான ஏ.கே.டி., பள்ளிக்கு செல்ல சிறப்பு பஸ்கள் காலை 6:00 மணி முதல் இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.