உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாவட்டத்தில் மரவள்ளி சாகுபடி தொடர்ந்து உயர்வு: சேகோ தொழிற்சாலை அமைக்க கோரிக்கை

மாவட்டத்தில் மரவள்ளி சாகுபடி தொடர்ந்து உயர்வு: சேகோ தொழிற்சாலை அமைக்க கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் பங்கேற்று கோரிக்கை மற்றும் புகார்களை தெரிவித்தனர்.அதில் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் குறித்த விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும். பயிர்களுக்கான நிவாரண தொகை குறித்தும் தெரிவிக்க வேண்டும். உயர்மின் கோபுரம் அமைக்கப்படும் விவசாய நிலங்களின் உரிமையாளர்களுக்கு உடனடியாக பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி பயிரிடப்படுகிறது. வெளி மாவட்ட சேகோ தொழிற்சாலை நிறுவனங்கள் மரவள்ளியை கொள்முதல் செய்யப்படும் நிலையில், அவ்வப்போது விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. எனவே, சேகோ தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தரணி சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவை பணத்தை பெற்று தர வேண்டும். வன பகுதியில் உள்ள காட்டு பன்றிகள் விவசாய பயிர்களை அதிகளவில் சேதப்படுத்தி வருகிறது. அதனை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்கள் குறித்து வி.ஏ.ஓ., -வேளாண்மை துறை அலுவலர்கள் பதிவு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். புயல் மற்றும் மழை பாதிப்புகளில் சேதமான பயிர்களுக்கான காப்பீடு தொகையை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகளின் நீர் வரத்து கால்வாய் மற்றும் பாசன கால்வாய் துார்ந்து போய் இருப்பதால், சில ஏரிகள் தண்ணீர் நிரம்பாமல் இருக்கிறது. ஆய்வு செய்து நீர் வரத்து ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மணிமுக்தா அணையின் ஆயக்கட்டு பாசன வாய்க்கால் பல இடங்களில் காணாமல் போய் உள்ளது. பொன்னி நெல் விதை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாடூர் பகுதியில் உலர்களம் அமைக்க வேண்டும். விவசாய நிலங்களுக்கு செல்லும் வயல்வெளி சாலைகளை சீரமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் விதை ஆய்வு கூடம் அமைத்து கொடுக்க வேண்டும். மார்க்கெட் கமிட்டிகளில் விவசாயிகளுக்கு காலதாமதமின்றி பணம் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரஞ்சரம் அடுத்த பாலக்காடு கோமுகி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். விவசாய நிலங்களுக்கு தேவையான உரம், மருந்து இருப்பு வைத்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மற்றும் புகார்கள் தெரிவித்தனர்.தொடர்ந்து, விவசாயிகளின் அனைத்து கோரிக்கை மற்றும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், வேளாண்ணை துணை இயக்குனர் அன்பழகன், வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி, தோட்டக்கலை துணை இயக்குனர் சிவக்குமார், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் நந்தகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மயில்வாகனன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் தாமரை மணாலன் உட்பட அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !