உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: கலெக்டர் அழைப்பு

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: கலெக்டர் அழைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள், 'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டத்தினை பயன்படுத்தி கொள்ள கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு: முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டம் தமிழக முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெறலாம். இத்திட்டத்தில் மேலும் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. முன்னாள் படை வீரர்களுக்கு வயது வரம்பு இல்லை. மணமாகாத மகள்கள், முன்னாள் படை வீரர்களின் கைம்பெண்கள், பணியின் போது இறந்த படை வீரர்களின் கைம்பெண்களின் குறைந்தபட்ச வயது 21 ஆகும். ஆனால் உச்ச வயது வரம்பு இல்லை. மேலும் முன்னாள் படைவீரர்களின் திருமணமாகாத மகன்கள் வயது வரம்பு 25 ஆக இருக்க வேண்டும். 25 வயதிற்கு மேற்பட்ட முன்னாள் படைவீரர்களின் மகன்கள், முன்னாள் படைவீரர் அல்லது விதவையரின் தொழிலில் கூட்டாக இணைந்து செயல்படலாம். விவசாயம் சார்ந்த தொழில்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு சார்ந்த தொழில்கள் செய்திடலாம். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள், விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04146-220524 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ