29 வழித்தடங்களில் மினி பஸ் இயக்க கலெக்டர் அனுமதி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்க வழித்தட அனுமதி வழங்கப்பட்டது.மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி ஏற்படுத்தும் வகையில், புதிய மினி பஸ் விரிவான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து ஏற்கனவே மினி பேருந்து உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, 29 புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்க விண்ணப்பங்கள், கலெக்டர் அலுவலகத்தில் பெறப்பட்டன.இதில், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 11, உளுந்துார்பேட்டை ஒன்றியத்தில் 5, என மொத்தமாக 16 வழித்தடங்களில் மினி பஸ் இயக்க, ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இந்த வழித்தடங்களில் மினி பஸ் இயக்க குலுக்கல் முறையில் உரிமையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.தொடர்ந்து, அனைவருக்கும் வழித்தட அனுமதியை கலெக்டர் பிரசாந்த் வழங்கினார். அப்போது, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், மினி பஸ் உரிமையாளர்கள் உடன் இருந்தனர்.ஏற்கனவே 25 வழித்தடங்களில் மினி பஸ் இயக்க அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.