தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 2.49 லட்சம் பேருக்கு பணி ஆணை வழங்கல் கலெக்டர் பிரசாந்த் தகவல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2,049 தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 392 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் தொழில் முறை மற்றும் நிர்வாக வேலை வாய்ப்பு, தொழில் நுட்ப அலுவலர்களின் ஆலோசனை, சிறப்பு பயிற்சி, உதவித் தொகை, தனியார் துறை வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் உதவித் தொகை பெற வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவு பெற்றிருக்க வேண்டும். புதுப்பித்திருக்க வேண்டும். புதுப்பிக்காதவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படாது. மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் இதுவரை நடத்தப்பட்ட 2,049 தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 60,057 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. அதில் 13 லட்சத்து 57 ஆயிரத்து 99 பேர் கலந்து கொண்டதில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 392 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மெய்நிகர் கற்றல் வலைதளம் மூலம் 730 தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதனை 42 லட்சத்து 72 ஆயிரத்து 898 பதிவிறக்கங்களும், 3 லட்சத்து 96 ஆயிரத்து 732 பதிவுதாரர்களும், 97 ஆயிரத்து 53 ஆயிரத்து 466 பார்வையாளர்கள் பார்வையிட்டனர். தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் அரசு பணிகளுக்கான 1,657 இலவச பயிற்சி வகுப்புகளில் 81 ஆயிரத்து 352 பேர் பயிற்சி பெற்றனர். இதில் 6 ஆயிரத்து 618 பேர் தேர்ச்சி பெற்று அரசு பணியில் சேர்ந்துள்ளனர். மேலும் 2,494 பள்ளிகள், 466 தொழில் பயிற்சி நிலையங்கள், 204 தொழில்நுட்ப கல்லுாரிகள், 3,122 கல்லுாரிகளில் நடத்தப்பட்ட தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகள் மூலம் 8 லட்சத்து 95 ஆயிரத்து 269 பேர் பயனடைந்துள்ளனர். எனவே வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், வேலை வாய்ப்பு முகாம்கள், அரசு போட்டித் தேர்வு பயிற்சியினை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.