போட்டி தேர்வுகளுக்கு வழிகாட்டுகிறது தினமலர் பட்டம் இதழ்: ஏ.கே.டி., கல்வி நிறுவன இயக்குனர் ராஜேந்திரன் பெருமிதம்
கள்ளக்குறிச்சி: மாணவர்களின் அறிவு திறனை வளர்க்கும் களஞ்சியமாக 'தினமலர்- பட்டம்' இதழ் திகழ்கிறது என, ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் கூறினார். 'தினமலர் பட்டம் இதழ்' வினாடி வினா போட்டி குறித்து அவர் கூறியதாவது: தினமலர் பட்டம் நாளிதழ், மாணவர்களின் கல்விப்பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது வெறும் நாளிதழ் மட்டுமல்ல, மாணவர்களின் அறிவு திறனை வளர்க்கும் களஞ்சியமாக உள்ளது. குறிப்பாக, போட்டித் தேர்வுகளை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு இது ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது. பள்ளியில் 6ம் வகுப்பிலிருந்து நீட், ஜே.இ.இ., என்.டி.ஏ., டி.என்.பி.எஸ்.சி., போன்ற போட்டித் தேர்வுகளுக்கான அடிப்படை பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பாக எங்கள் பள்ளி மாணவர்கள் என்.டி.ஏ., தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். கிராமப்புற மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் கல்வி வழங்கி போட்டி தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் தயார்படுத்துவது, எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு தேவையான அடிப்படை திறன்களை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். கல்வியில் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்கு வாசிப்புப் பயிற்சி அளிக்க, தினமலர் பட்டம் பெரும் உதவியாக இருக்கிறது. அதன் எளிய நடை, சுவாரஸ்யமான தகவல்களும் மாணவர்களை வாசிப்பில் ஈடுபட வைக்கின்றன. தினமலர் பட்டம் இதழ் வினாடி வினா போட்டி மாணவர்களுக்கு பொது அறிவை வளர்த்து கொள்வதற்கான உத்வேகத்துடன், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து போட்டித் தேர்வுகளில் எங்கள் மாணவர்களை சாதிக்க வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.