கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றம் மாற்றுத்திறனாளிகள் உரிமை சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சியில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக நியமிக்க மாற்றுத்திறனாளிகளிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் ரூ.2 ஆயிரம் செலவு செய்து மனுதாக்கல் செய்தனர். இதில், மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்வதில் அரசியல் குறுக்கீடு உள்ளது. எனவே, குற்ற பிண்ணனி இல்லாத, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் வெளிப்பட தன்மையுடன் தேர்வு செய்ய வேண்டும், 50 சதவீதம் பெண் மாற்றுத்திறனாளிகளை நியமித்தல், அரசு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் வீடுகளில் 5 சதவீத வீடுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தொடர்ந்து வேலையும், முழு ஊதியமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மதியம் 12.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) புருஷொத்தமன், மாற்றுத்தினாளி நல அலுவலர் அந்தோணிராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, டி.எஸ்.பி., தங்கவேலு மற்றும் அலுவலர்கள் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பேரில், மதியம் 3.30 மணியளவில் தர்ணாவில் ஈடுபட்டவர் கலைந்து சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் 3 மணி நேரம் மாற்றுத்திறனாளிகள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.