உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டதால் விவசாயம்... பாதிப்பு; திருக்கோவிலுார் சுற்றுப்பகுதி விவசாயிகள் கவலை

ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டதால் விவசாயம்... பாதிப்பு; திருக்கோவிலுார் சுற்றுப்பகுதி விவசாயிகள் கவலை

திருக்கோவிலுார : திருக்கோவிலுார் சுற்றுவட்டார பகுதிகளில் நீர் நிலைகள் வற்றி, நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றதால் விவசாயமும், குடிநீர் விநியோகமும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.திருக்கோவிலுார் சுற்று வட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை 40 சதவீதம் என்றால், வடகிழக்கு பருவமழை 60 சதவீதம் மழை தரும். இதன் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி முழு நேர விவசாய பணியை இப்பகுதி மக்கள் மேற்கொள்வர்.கடந்த முறை வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் ஏரி, குளங்கள் வறண்டு, சம்பா சாகுபடி முற்றிலுமாக தடைபட்டது. இச்சூழலில் வைக்கோல் உள்ளிட்ட பசுத்தீவன உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்தது போல் தற்போது வரை சரியாக பொய்யாத சூழலில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், கால்நடைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், கரும்பு உள்ளிட்ட விவசாயம் முற்றிலுமாக நின்று போன நிலையில், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றி குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் அபாய சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக கோலப்பாரை, திம்மச்சூர், பாடியந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. ஊராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகிக்கும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்ததால் மக்களின் முழு அளவு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகிறது.தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு மாத காலமாக பொய்த்துப் போனதால் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் வறண்டு, வைக்கோல் உள்ளிட்ட தீவனத்தையே நம்பி கால்நடைகளை விவசாயிகள் காப்பாற்றி வருகின்றனர் இதன் காரணமாக வைக்கோலின் விலையும் அதிகரித்துள்ளது.வரும் நாட்களில் பருவமழை பெய்தால் மட்டுமே கால்நடைகளை வளர்ப்போர் நிம்மதி அடைய முடியும். இதே நிலை நீடித்தால் வறட்சி அதிகரித்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.ஒன்றிய நிர்வாகம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.வரும் நாட்களில் பருவ மழை பெய்யுமா? நீர் நிலைகள் நிரம்புமா? தடையற்ற குடிநீருக்கு வழி ஏற்படுமா? விவசாயம் செழிக்குமா? என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் பொதுமக்களும், விவசாயிகளும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ