உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி: வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு; தமிழ் மொழிக்காக பணியாற்றி வரும் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், வயது முதிர்ந்த தமிழ் சான்றோர்களுக்கு அரசு பஸ்களில் கட்டணமில்லா பயண சலுகையும், தமிழறிஞர்களின் மறைவுக்கு பின், அவரின் மனைவி, திருமணமாகாத மற்றும் கணவனை இழந்த மகளுக்கு வாழ்நாள் முழுவதும் ரூ.2,500 மற்றும் மருத்துவப்படியாக ரூ.500 வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 100 நபர்கள் தேர்வு செய்து உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, 2025-2026ம் ஆண்டிற்கு இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் வயது முதிர்ந்த தமிழறிஞர்களிடமிருந்து இணையதளம் மூலமாகவும், நேரிலும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகை, சமூகநல பாதுகாப்பு உதவி தொகை உட்பட தமிழக அரசின் வேறு திட்டங்கள் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது. கடந்த ஜனவரி 1ம் தேதி 58 வயது பூர்த்தியடைந்து, ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்குள் பெறுபவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், தமிழ் பணி செய்ததற்கான விவரக்குறிப்பு, இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பரிந்துரைச் சான்று, ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், மரபுரிமையர் (கணவன், மனைவி) எனில் அவர்களது ஆதார் கார்டு நகல் இணைக்க வேண்டும். விண்ணப்பத்தை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகவும், www.tamilvalarchithurai.tn.gov.inஎன்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வரும் 17ம் தேதிக்குள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !