ஆக்கிரமிப்பில் இருந்த பெரிய ஏரி மீட்பு உளுந்துார்பேட்டையில் பரபரப்பு
உளுந்துார்பேட்டை: உளுந்துார் பேட்டையில் ஆக்கிரமித்து மீன் வியாபாரம் செய்த ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் மீட்டனர். உளுந்தூர்பேட்டையில் சென்னை நெடுஞ்சாலையையொட்டி பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பாளர்கள் மண் கொட்டி மீன் வியாபாரம் செய்துவந்தனர். இதற்காக நீர் வழிப்பாதையில் சிமென்ட் பைப் லைன் மூலம் மண் கொட்டி வழி ஏற்படுத்தி இருந்தனர்.இதனை அறிந்த பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பூங்கொடி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் அரசியல் தலையீட்டால் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. அதே நேரத்தில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பலர் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து உதவி பொறியாளர் பூங்கொடியும் அதிகாரிகளுக்கும், விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்திலும் முறையிட்டு ஆக்கிரப்புகளை அகற்றுவதற்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை 11 மணியளவில் ஏரியை ஆக்கிரமித்து கொட்டப்பட்ட மண்ணை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். மேலும் ஏரிப் பகுதிக்கு செல்லும் வழிக்காக அமைக்கப்பட்ட சிமென்ட் பைப் லைனையும் அகற்றினர். பின்னர் ஏரி பகுதிக்குள் செல்லாத வகையில் பெரிய பள்ளத்தை வெட்டி தடுப்பு ஏற்படுத்தினர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் ஏரியை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.