இசைப்பள்ளி அமைக்க கோரி நாட்டுப்புற கலைஞர்கள் கலெக்டரிடம் மனு
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இசைப்பள்ளி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க மாநில துணை தலைவர் மாரியாப்பிள்ளை தலைமையில் 200க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் நாடக கதாபாத்திரங்கள் போன்ற வேடமிட்டு கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில்; கள்ளக்குறிச்சி மாவட்டம் துவங்கி 5 ஆண்டுகள் கடந்து விட்டது. இம்மாவட்டத்தில் கரகாட்டம், தெருக்கூத்து, நையாண்டி மேளம், பஜனை, தவில், நாதஸ்வரம், பம்பை, உடுக்கை உள்ளிட்ட 20 ஆயிரத்துக்கும் அதிகமான நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளனர். இம்மாவட்டத்தின் கடைக்கோடியான கல்வராயன்மலையிலிருந்து கலைஞர்களுக்கான அடையாள அட்டை, நல வாரியம் பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு, 150 கி.மீ., தொலைவு பயணம் செய்து, விழுப்புரம் இசைப்பள்ளிக்கு சென்று வரவேண்டி உள்ளது. அத்தியாவசிய பணிகளுக்காக கலைஞர்களின் நேரம், காலத்தை வீணடிக்காமலும், வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இசைப்பள்ளி துவங்கிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.