சுகாதார ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஆலோசனை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சுகாதார ஆய்வாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்துவது தொடர்பான ஆலோசனை நிகழ்ச்சி நாளை (10ம் தேதி) நடக்கிறது. கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய, மாநில அரசு சார்பில் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், சுகாதார ஆய்வாளர் - 2 (ஹெல்த் இன்ஸ்பெக்டர்) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1,429 காலிப்பணியிடங்கள் உள்ளன. பிளஸ் 2 வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை படித்து முடித்து, பல்நோக்கு சுகாதார பணியாளர், சுகாதார ஆய்வாளர் ஆகிய 2 ஆண்டுகள் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஹலெத் இன்ஸ்பெக்டர் போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வரும் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டித் தேர்வர்கள் பயனடையும் வகையில் இலவச பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஆலோசனை நிகழ்ச்சி நாளை 10ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கள்ளக்குறிச்சி, நேப்பால் தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது. தேர்வுக்கு தயாராகும் நபர்கள் ஆலோனை நிகழ்ச்சியில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.