வாலிபருக்கு கத்தி வெட்டு: மர்ம நபர்களுக்கு வலை
சங்கராபுரம், : சங்கராபுரம் அருகே வாலிபரை கத்தியால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சங்கராபுரம் சார் பதிவாளர் அலுவலகம் பின்புறம் வசித்து வருபவர் முகமதுகவுஸ் மகன் முகமதுயாசர், 28; ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜா என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு முகமது யாசர் வீட்டில் இருந்தார். அப்போது, பல்சர் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், 100 ரூபாய் பத்திரம் கேட்டனர். அடுத்த சில நொடியில், யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரியாதா என கேட்டு, இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகமது யாசரின் தலையில் வெட்டினர். முகமது யாசர் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் ஓடி வந்தனர். இதை பார்த்து மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பினர். தலையில் பலத்த காயமடைந்த முகமது யாசர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து முகமது யாசர் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.