மேலும் செய்திகள்
நீர்நிலையில் மருத்துவ கழிவுகள்
24-Oct-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் மூட்டைகளாக கிடக்கும் மருத்துவ கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் இயங்கி வரும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இம்மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படும் மருந்துகள், ரத்தம் படிந்த கட்டு துணிகள், பிளாஸ்டர், அறுவை சிகிச்சை அரங்கில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் தீயில் எரித்து அப்புறப்படுத்தப்படும். கடந்த 2 மாதங்களாக மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள் அகற்றப்படாமல், மருத்துவமனை வளாகத்தில் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த மூட்டைகளில் இருந்து அழுகிய கடும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள், நோயாளிகள் வாந்தி எடுத்தபடி கடக்கின்றனர். மழை பெய்யும்போது, மருத்துவ கழிவு மூட்டைகள் நனைந்து அதிலுள்ள கழிவுகள் மழைநீருடன் கலந்து செல்கிறது. இதனால் சுற்றுப்புறத்தில் வசிக்கும் பொதுமக்கள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. சிறிய காயம் அல்லது சாதாரண காய்ச்சல் தலைவலியுடன் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், மருத்துவ கழிவுகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் கழிவுநீரால் மேலும் பல தொற்று வியாதிக்கு ஆளாகும் அபாயம் உருவாகி உள்ளது. நோய் குணப்படுத்துவதை விட மேலும் நோய் வராமல் தடுப்பது முக்கியம். எனவே, மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
24-Oct-2025