| ADDED : பிப் 19, 2024 06:20 AM
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100க்கும் மேற் பட்ட துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் பாழடைந்து கிடப்பதால் செவிலியர்கள் தங்கி பணிபுரிய அச்சமடைந்துள்ளனர்.கிராமங்களில் சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கேயே தங்கி சிகிச்சையளிக்க செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 3000 முதல் 5000 பேர் வரை மக்கள் தொகை கொண்ட பகுதியில் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களும், 30 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதியில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களும், 50 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும் கட்டப்பட்டு செவிலியர்கள், மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 217 கிராமங்களில் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களும், 36 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களும், 9 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. அவற்றில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களும், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் நல்ல நிலையில் இயங்கி வருவதால் செவிலியர், மருத்துவர்கள் தடையின்றி சிகிச்சை அளித்து வருகின்றனர்.ஆனால் 100க்கும் மேற்பட்ட துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் 40 ஆண்டுகளை கடந்தும் பாழடைந்துள்ளன. பழுதடைந்த கட்டடங்களில் மழைநீர் ஒழுகுவதோடு, கட்டடத்தின் உள் பகுதி மேற்கூரை சிமென்ட் காரைகள் பெயர்ந்து அவ்வப்போது விழுகின்றன.இதனால் தங்கள் மேல் விழுந்து உயிர் சேதம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் செவிலியர்கள் அங்கு தங்கி பணிபுரிய அச்சம் அடைந்துள்ளனர்.பாழடைந்த கட்டடத்தில் பணிபுரிய தயங்கிய செவிலியர்கள் வாடகை கட்டடத்தில் தங்கி பணிபுரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல செவிலியர்கள் தங்க வழியின்றி வெளியூரிலிருந்து வந்து பணிபுரிந்து செல்கின்றனர்.இதனால் கிராம மக்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்க முடியாததோடு, மருத்துவ பொருட்களும் வைப்பதற்கு இடமின்றி செவிலியர்கள் தவித்து வருகின்றனர்.எனவே பாழடைந்து கிடக்கும் சுகாதார நிலையங்களை கண்டறிந்து சீரமைத்து செவிலியர் தங்கி பணி புரியும் வகையில் கட்டட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -நமது நிருபர்-