கள்ளக்குறிச்சி பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்புகளால் பயணிகள் அவதி
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து பல்வேறு கிராமங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் நாள்தோறும் பல்வேறு தேவைகளுக்காக கள்ளக்குறிச்சி நகருக்கு வந்து செல்கின்றனர். இதனால், பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளின் கூட்டமும் அதிகமாக இருக்கும். பஸ் நிலையத்தில் உள்ள கடை உரிமையாளர்கள் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்து கடையை விரிவுபடுத்தியுள்ளனர். இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நிழலில் நிற்க இடம் இன்றி, வெயிலில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல் பஸ்கள் வெளியேறும் மற்றும் உள்ளே வரும் இடங்களில் பூ, பழம் விற்பனை செய்வோர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பயணிகள் பஸ் நிலையத்திற்குள் வருவதற்கும், வெளியே செல்லவும் சிரமப்படுகின்றனர். எனவே, நடைபாதைகளில் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற போக்குவரத்து போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.