உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியில் சாலையில் குளம்போல் தேங்கிய மழை நீர்

கள்ளக்குறிச்சியில் சாலையில் குளம்போல் தேங்கிய மழை நீர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பெய்த தொடர் மழையால் சாலையில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். வடக்கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் வயல்வெளி பகுதியில் மழை நீர் வழிந்தோடுகிறது. தியாகதுருகம் சாலை, கலெக்டர் அலுவலகம், நான்கு முனை சந்திப்பு, சேலம் சாலை உள்ளிட்ட வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுதியான இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சாலையோரம் உள்ள கழிவு வாய்க்காலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் அடைப்புகளால் கழிவு நீருடன் மழை நீர் கலந்து சாலையில் வழிந்தோடியது. பஸ், கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் ஒன்றையொன்று முந்தி கொண்டு வேகமாக செல்லும் போது சாலையோரம் நடந்து சென்ற பொதுமக்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது தண்ணீரை வாரி இறைத்தவாறு சென்றன. வாகனங்கள் அணிவகுத்து சென்றதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. நகரின் பல்வேறு பகுதியில் மழை நீர் வெளியேறுவதற்கு முறையான வடிகால் வசதி இல்லாததால், ஆங்காங்கே குடியிருப்புகளுக்கு மத்தியில் மழை நீர் தேங்கியுள்ளது. தொடர் மழையால் கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி