சாத்தனுார் அணையில் மீண்டும் தண்ணீர் திறப்பு
திருக்கோவிலுார்; சாத்தனுார் அணைக்கான நீர்வரத்து அதிகரித்ததையடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனுார் அணை உள்ளது. அணையின் முழு உயரமான 119 அடியில் 7,321 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. வடகிழக்கு பருவமழை துவங்கியதையடுத்து அணைக்கான நீர்வரத்து உயர்ந்து 117 அடியை எட்டி 6,875 மில்லியன் கன அடி நிரம்பியது. தொடர்ந்து, அணை திறக்கப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருந்தது.இதன் மூலம் திருக்கோவிலுார் அணைக்கட்டில் இருந்து ராகவன் வாய்க்கால், மலட்டாறு, பம்பை வாய்க்கால்களில் தண்ணீர் திருப்பி விடப்பட்டு 100க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. பருவ மழை குறைந்ததை அடுத்து, அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக கடந்த 15ம் தேதி காலை அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.மீண்டும் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக, நேற்று முன்தினம் மதியம் 12:00 மணியளவில் அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.நேற்று காலை நிலவரப்படி அணையில் 117.60 அடி, அதாவது 7,008 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,220 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு 95.72 சதவீதமாக உள்ளது.