தள்ளுவண்டி கடைகள் அகற்றம்: பெண்கள் சாலை மறியல்; உளுந்துார்பேட்டையில் பரபரப்பு
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் கார் ஸ்டாண்ட் டிரைவர்களை கண்டித்து தள்ளுவண்டியில் கூழ் வியாபாரம் செய்யும் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.உளுந்துார்பேட்டை பஸ் நிலையம் அருகே வாடகை கார்கள் நிறுத்துமிடம் உள்ளது. அதற்கு முன்பாக சாலையோரம் தள்ளுவண்டியில் கூழ் வியாபாரம் செய்யும் பெண்கள் தள்ளுவண்டிகளை நிறுத்தி வியாபாரம் செய்து வந்தனர்.நேற்று வழக்கம் போல் தள்ளுவண்டியில் கூழ் வியாபாரம் செய்ய தள்ளுவண்டியுடன் வந்த பெண்களை கார் ஸ்டாண்ட் டிரைவர்கள், இங்கு தள்ளு வண்டிகளை நிறுத்தக்கூடாது என கூறி அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் 5க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் தள்ளுவண்டிகளை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், தள்ளு வண்டிகளை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது பெண்கள் தங்களது வாழ்வாதாரமான தள்ளுவண்டி வியாபாரத்தை முடக்கப் பார்ப்பதாக கூறி போலீசாரின் காலில் விழுந்து கதறி அழுதனர்.பின், போலீசார் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டு நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்து அவர்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தியதோடு தள்ளு வண்டிகளை காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.