சாலையில் பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீர்
கள்ளக்குறிச்சி : 'கள்ளக்குறிச்சியில் நேற்று பெய்த மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று மதியம் 1:00 மணி முதல் மழை பெய்த துவங்கியது. இதில், கள்ளக்குறிச்சி நகரில் 30 நிமிடம் கனமழை கொட்டி தீர்த்தது. கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் சாலையில் சேரும் மழைநீர், அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கலந்து ஆற்றுக்கு செல்வது வழக்கம். ஆனால், கால்வாயில் பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் தேங்கி கிடந்ததால் பல்வேறு இடங்களில் அடைப்பு ஏற்பட்டது. இதனால், மழைநீரும், கால்வாயில் இருந்த கழிவுநீரும் கலந்து வெளியேறியது. தியாகதுருகம் சாலையில் 3க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். பருவ மழைக்காலம் துவங்கும் முன்னதாக, தியாகதுருகம் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை துார்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.