உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  உளுந்துார்பேட்டை அரசு கல்லுாரியில் அடிப்படை வசதியின்றி மாணவர்கள்... அவதி! நிரந்தர பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமிக்க பெற்றோர் கோரிக்கை

 உளுந்துார்பேட்டை அரசு கல்லுாரியில் அடிப்படை வசதியின்றி மாணவர்கள்... அவதி! நிரந்தர பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமிக்க பெற்றோர் கோரிக்கை

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நிரந்தர பேராசிரியர்கள், அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். உளுந்துார்பேட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கொண்டு வர வேண்டும் என பல தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். சட்டசபை கூட்டத் தொடரில் தொகுதி எம்.எல்.ஏ., மணிக்கண்ணன் உளுந்துார்பேட்டையில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதன்பேரில் கடந்த மே 30ம் தேதி நடப்பு கல்வியாண்டிலேயே உளுந்துார் பேட்டையில் கல்லுாரி துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜூன் 20ம் தேதி உளுந்துார்பேட்டை பழைய அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்பட்டது. இக்கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம், தமிழ், பி.பி.ஏ., வணிக நிர்வாகம், பி.காம்., வர்த்தகம், பி.எஸ்.சி., கணினி அறிவியல் என 5 பாட பிரிவுகள் துவங்கப்பட்டது. தற்போது இக்கல்லுாரியில் 360, மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக 5 பேராசிரியர்கள் தற்காலிகமாக மாற்று கல்லுாரியில் இருந்து புதிய கல்லுாரியில் பணிப்புரிய அமர்த்தப்பட்டனர். ஆனால் இக்கல்லுாரியில் பணிப்புரிய நிரந்தரமான பேராசிரியர்கள் என யாரையும் நியமிக்கவில்லை. அவசர கதியில் துவக்கப்பட்ட கல்லுாரியில் அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக மாணவிகளுக்கு தேவையான கழிவறைகள் போதிய அளவில் இல்லை. இருக்கும் சில கழிவறைகளையும் சுத்தம் செய்ய பணியாளர்கள் இல்லை. இதனால்,மாணவிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். கல்லுாரி அலுவலக பணிக்கு தேவையான உதவியாளர், அலுவலக பணியாளர்கள் கூட நியமிக்கப்படவில்லை. இதனால் தற்காலிக பேராசிரியர்கள், குறைந்த ஊதியத்திற்கு ஊழியர்களை அமர்த்தி பணிகளை செய்து வருகின்றனர். போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் முழு நேரமாக இயங்க வேண்டிய கல்லுாரி, பகுதி நேர கல்லுாரியாக செயல்பட்டு வருகிறது. பெற்றோர் தங்களது பிள்ளைகள் நன்கு படித்து, வேலை வாய்ப்பு கிடைத்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் கல்லுாரிக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் இக்கல்லுாரியில் போதிய பேராசிரியர்கள், பணியாளர்கள் இல்லாததோடு, அடிப்படை வசதிகளும் இல்லாமல் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு இடையே கல்வி பயில வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இக்கல்லுாரி கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கினாலும், இடம் தேர்வு செய்யப்படாமல் உள்ளது. இதனால், நிரந்தர கட்டடம் அமைவது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, கல்லுாரிக்கு நிரந்தர பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் நியமிப்பதுடன், கல்லுாரிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கல்லுாரி மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ