திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலுார் நகராட்சி மற்றும் 20 ஊராட்சிகளை விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற தொகுதி மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்ட பொழுது, திருக்கோவிலுார் தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலுார் மற்றும் 20 ஊராட்சிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது. இதன் காரணமாக 75 சதவீத ஊராட்சிகள் விழுப்புரம் மாவட்டத்திலும், 25 சதவீதம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக திருக்கோவிலுார் தொகுதியை தேர்தல் ஆணையம் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆனால் தேர்தல் பணிகள் அனைத்தும் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் தாலுக்கா அலுவலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க தொகுதி தேர்தல் செலவுகளை விழுப்புரம் கலெக்டர் மேற்பார்வையில் கண்டாச்சிபுரம் தாசில்தார் மேற்கொள்ளும் நிலையில், செலவினங்களை திருக்கோவிலுார் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏற்க வேண்டி இருக்கிறது. இதில் பணம் பெறுவதில் வருவாய் துறை ஊழியர்கள் பெரும் சிக்கலை சந்தித்து குழப்பத்திற்கு ஆளாகின்றனர். அதிகாரிகளின் நிலை இது என்றால், மக்களின் அவலம் சொல்லி மாலாது. திருக்கோவிலுாரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் துாரத்தில் இருக்கும் மணம்பூண்டி, அரகண்டநல்லுார் என அருகாமையில் இருக்கும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சப்கலெக்டர் அலுவலகம், தீயணைப்பு நிலையம், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், போலீஸ் எஸ்.பி., அலுவலகம், மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகப் பணிகளுக்கு 35 கிலோ மீட்டர் துாரத்தில் இருக்கும் விழுப்புரத்திற்கு பயணிக்க வேண்டி உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த நோயாளிகள் குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள் திருக்கோவிலுார் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவர்கள் முண்டியம்பாக்கம் மருத்துவமனையை கை காட்டும் அவலம் என திண்டாடி வருகின்றனர். இத்தனை அவஸ்தைகளையும் பொறுத்துக் கொண்டு விழுப்புரம் சென்றால், மாவட்ட பிரிப்பின் காரணமாக கூடுதலாக பல தாலுகாக்கள் சேர்க்கப்பட்டதால் பனிச்சுமை அதிகரித்து, மக்களின் மனுக்கள் மீதான தீர்வு எளிதில் கிடைப்பது இல்லை. திருவெண்ணெய்நல்லுார், கண்டாச்சிபுரம் தாலுகாக்களின் நீதிமன்ற எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டதால், திருக்கோவிலுார் சார்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வழக்கின்றி, வாழ்வாதாரம் இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஊராட்சிகளின் வளர்ச்சி பணி திட்டங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் 20 ஊராட்சிகளில் மிக மோசமான நிலையில் உள்ளது. கள்ளக்குறிச்சி கலெக்டர், மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் மற்றும் மாவட்டத்தில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் அழுத்தம் காரணமாக ரிஷிவந்தியம் உள்ளிட்ட தொகுதிகளுக்கே நிதி ஒடுக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனால் திருக்கோவிலுார் தொகுதிக்கு உட்பட்ட 20 ஊராட்சி தலைவர்கள் தங்கள் ஊராட்சியை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர். இது குறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். பொன்முடி எம்.எல்.ஏ., மூலம் விழுப்புரம் வந்த முதல்வர் ஸ்டாலினிடம் இது குறித்த கோரிக்கை மனு தொகுதி மக்கள் சார்பில் வழங்கப்பட்டது. திருக்கோவிலுார் மற்றும் 20 ஊராட்சிகள் விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்கப்பட்டுவிடும். இதன் மூலம் திருக்கோவிலுார் கோட்டாட்சியர் அலுவலகத்துடன் திருவெண்ணைநல்லுார், கண்டாச்சிபுரம் தாலுகாக்கள் சேர்க்கப்படுவதால் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் அலையும் அவலத்திற்கு தீர்வு கிடைப்பதுடன், அரசின் திட்டங்களும் விரைவாக சென்றடையும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர். தி.மு.க., அரசு அமைந்து 4 ஆண்டுகள் கடந்து, விரைவில் தேர்தலை எதிர்கொள்ளும் சூழலிலும் மக்களின் கோரிக்கை நிறைவேற்றபடுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. இப்பிரச்சினை எதிர்வரும் தேர்தலில் கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணியாக இருக்கும்.