உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  பி.எல்.ஓ., தற்கொலை செய்ததற்கு அரசியல் கட்சியினர் காரணமா? வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 பி.எல்.ஓ., தற்கொலை செய்ததற்கு அரசியல் கட்சியினர் காரணமா? வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலுார்: எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்டிருந்த பி.எல்.ஓ., தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில், அரசியல் பிரமுகர்கள் இருப்பதாக, வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார், சந்தைப்பேட்டை, கனகனந்தல் சாலையில் வசிப்பவர் முபாரக் மனைவி ஜாகிதாபேகம், 37; தனக்கனந்தல் கிராம உதவியாளர். ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட சிவனார்தாங்கல் ஓட்டுச்சாவடி நிலை அலுவலராக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம் மாலை 4:30 மணியளவில் வீடு திரும்பிய ஜாகிதாபேகம் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியின் தற்கொலைக்கு, வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் தி.மு.க., முக்கிய நிர்வாகி தலையிட்டு, அழுத்தம் கொடுத்ததுதான் காரணம் என முபாரக் குற்றஞ்சாட்டினார். முபாரக் புகாரின்படி, திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்தனர். இந்நிலையில், அனைத்து வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், திருக்கோவிலுார் தாலுகா அலுவலகம் முன் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, பேசிய கிராம உதவியாளர்கள் சங்க மாநில அமைப்பு செயலர் தண்டபாணி, 'ஜாகிதாபேகம் இறப்பிற்கு பணிச்சுமை, அரசியல் அழுத்தம்தான் காரணம். அதிகாரிகள் தொந்தரவு இல்லை. அரசியல் பிரமுகர்களின் அழுத்தம் தான் அதிகமாக உள்ளது. இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு காலம் தாழ்த்தாமல் அரசு பணி வழங்க வேண்டும்' என்றார். இதற்கிடையே இறப்பிற்கு காரணம் குடும்ப பிரச்னையே என ஜாகிதாபேகத்தின் தந்தை ஜான்பாஷா, டி.எஸ்.பி., பார்த்திபனிடம் புகார் செய்துள்ளார். இறப்பிற்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  சென்னை, பள்ளிக்கரணையில், வாக்காளர் படிவம் சரிபார்ப்பு பணியில் ஓட்டுச்சாவடி அலுவலராக ஈடுபட்டுள்ள அரசு பள்ளி ஆசிரியை ஒருவர், இப்பணி மன உளைச்சலை ஏற்படுத்தி, தற்கொலைக்கு துாண்டு வதாக குமுறியுள்ளார். எஸ்.ஐ.ஆர்., பணியில் 50 வயதிற்கு மேற்பட்ட தன்னை, உட்படுத்துவதால், வீட்டில் மட்டுமின்றி பள்ளியிலும் சிரமம் ஏற்படுகிறது என, சக ஆசிரியரிடம் மொபைல் போனில் பேசுவது விவாத பொருளாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்