உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மூங்கில்துறைப்பட்டில் தீயணைப்பு நிலையம் அமைவது... எப்போது?: 40 கிராம மக்கள் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை தேவை

மூங்கில்துறைப்பட்டில் தீயணைப்பு நிலையம் அமைவது... எப்போது?: 40 கிராம மக்கள் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை தேவை

மூங்கில்துறைப்பட்டு, நவ. 28- மூங்கில்துறைப்பட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என 40க்கும் மேற்பட்ட கிராம மக்களின்எதிர்பார்ப்பாக உள்ளது. அதிகாரிகள் மக்கள்பிரநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மூங்கில்துறைப்பட்டு திருவண்ணாமலைக்கும் கள்ளக்குறிச்சிக்கும் மையப்பகுதியில் அமைந்து வளர்ந்து வரும் ஊராட்சியாக உள்ளது. இப்பகுதியில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் விரைவில் பேரூராட்சியாக அறிவிக்கப்பட உள்ளது. மூங்கில்துறைப்பட்டில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை, 3 தனியார் மேல்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளது. தற்போது இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மூலம் நான்கு வழிச்சாலை போடப்பட்டுள்ளது. மூங்கில்துறைப்பட்டைச் சுற்றிலும் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமங்கள் நிறைந்த இப்பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்தினை தடுக்க முடியாமல் விவசாயிகள் பல நஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். இப்பகுதிகளில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் 23 கி.மீ., தொலைவில் உள்ள சங்கராபுரத்திற்கும் 25 கி.மீ., தொலைவில் உள்ள திருவண்ணாமலைக்கும் 18 கி.மீ., தொலைவில் உள்ள தண்டராம்பட்டு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள் பெருத்த சேதம் ஏற்படுகிறது. மூங்கில்துறைப்பட்டில் தீயணைப்பு நிலையம் இருந்தால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். மூங்கில்துறைப்பட்டில் தென்பெண்ணையாறும், வட பொன்பரப்பில் முஸ்குந்தா நதியும் உள்ளது. இந்த இரண்டிலும் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விலங்குகள், மனிதர்கள் என அடித்து செல்கின்றனர். இவர்களை கண்டுபிடிக்க தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் நீரில் மூழ்குபவர்கள் காணாமல் போகின்றனர். இப்பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ளதால் அடிக்கடி விவசாய கிணற்றில் மாடுகள் விழுந்து விபத்துக்குள்ளாகிறது. அதுமட்டுமில்லாமல் காடுகள் நிறைந்த பகுதியாகவும் இருப்பதால் பாம்புகள் அடிக்கடி வீடுகளில் நுழைகிறது. பொதுமக்கள், விவசாய நிலங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாக்க இப்பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைத்தால் பொதுமக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். இப்பகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் மூங்கில்துறைப்பட்டில் கட்டாயம் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். 2 ஆண்டுகளுக்கு முன் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு மூங்கில்துறைப்பட்டுக்கு தீயணைப்பு நிலையம் வந்து விட்டதாக தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இது வெறும் கொண்டாட்டமாக மட்டுமே இருந்தது. ஆனால் இதுவரை தீயணைப்பு நிலையம் இப்பகுதிக்கு கொண்டு வராது வேடிக்கையாக உள்ளது. தீ விபத்தால் அதிக நஷ்டம் மூங்கில்துறைப்பட்டு அபார வளர்ச்சி அடைந்து வரும் ஊராட்சியாகும். இந்த ஊராட்சி விரைவில் பேரூராட்சியாக மாறும். இப்பகுதியில் தீயணைப்பு நிலையம் கொண்டு வந்தால் பொதுமக்களும், விவசாயிகளும் பயன்பெறுவர். இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்தால் தொழிற்சாலைகளில் பல்வேறு நஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். தீயணைப்பு நிலையம் அருகில் இருந்தால் நஷ்டங்களை தவிர்க்கலாம். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் மன உளைச்சலை போக்கக்கூடும். 40 கிராமங்களில் என் கிராமமும் அடங்கும். இப்பகுதியில் புதிதாக காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் தீயணைப்பு நிலையத்தையும் கொண்டு வந்தால் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். -அரசு இளந்தேவன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி