| ADDED : ஜூலை 04, 2024 09:15 PM
காஞ்சிபுரம்:வருவாய் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும், அந்தந்த தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, ஜூன் 14ம் தேதி துவங்கிய ஜமாபந்தி, 27ம் தேதி முடிந்தது.காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், கோட்டாட்சியர் சரவணகண்ணன், கலைவாணி மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி ஆகிய ஐந்து பேரும், ஒவ்வொரு தாலுகாவிலும், வருவாய் தீர்வாய அலுவலராக, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.இதில், வருவாய் துறை சம்பந்தமாக பட்டா கோரி விண்ணப்பம், பட்டா மேல்முறையீடு, உதவித்தொகை, சான்றிதழ் வழங்குவது, நில எடுப்பில் இழப்பீடு பிரச்னை என பல வகையிலான கோரிக்கைகளுக்கு பொதுமக்கள் மனு அளித்தனர்.ஐந்து தாலுகாவிலும் 5,255 பேர் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். அதிகபட்சமாக, காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் மட்டும் 1,530 பேர் மனு அளித்துள்ளனர்.அடுத்தபடியாக, உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில் 920 பேரும், ஸ்ரீபெரும்புதுாரில் 844 பேரும் மனு அளித்துள்ளனர். கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை நடத்தி தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக வருவாய் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.