| ADDED : ஜூன் 12, 2024 01:52 AM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், திடீரென தீப்பற்றி எரிந்த காரை, தீயணைப்புத் துறையினர் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.ஸ்ரீபெரும்புதுார், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ், 42; இவர், நேற்று முன்தினம் இரவு, 'ரெனால்ட் ட்ரைபர்' காரில், சிங்கபெருமாள் கோவிலில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் சென்றார். காரை மதுரமங்கலத்தைச் சேர்ந்த டிரைவர் ஏழுமலை, 40, ஓட்டினார்.ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், ஒரகடம் அருகே வந்தபோது, காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதனால், டிரைவர் ஏழுமலை காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, இருவரும் உடனடியாக கீழே இறங்கினர்.இதையடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் கார் திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ஒரகடம் தீயணைப்புத் துறை வீரர்கள், கொழுந்துவிட்டு எரிந்த காரில், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள், கார் முழுதும் எரிந்து நாசமானது. இது குறித்த தகவலின் படி, ஒரகடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.