புதிய பொது கழிப்பறை கட்டடம் வேகவதி தெருவினர் எதிர்பார்ப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வேகவதி நதி சாலையில், அப்பகுதி மக்களுக்காக, 15 ஆண்டுகளுக்கு முன் இருபாலருக்கான பொது கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது. வீட்டில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் பொது கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் கழிப்பறையில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டிருந்த நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதடைடந்தது. பழுதடைந்த மின்மோட்டாரை பழுதுநீக்கம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.கழிப்பறைக்கு தண்ணீர் வசதி இல்லாததால், அப்பகுதிவாசிகள் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பயன்பாடின்றி இருந்த கட்டடம் பராமரிப்பு இல்லாததால், தற்போது கூரையில் சிமென்ட் காரை உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் சிதிலமடைந்துள்ளது.எனவே, சேதமடைந்த பழைய கழிப்பறை கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய கழிப்பறை கட்டடம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேகவதி நதி தெரு வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.