காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கொலை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் முக்கிய ரவுடியாக வலம் வந்த வசூல்ராஜா, நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் சரமாரியாக வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடந்த கொலை வெறி தாக்குதலால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.காஞ்சிபுரம், மாமல்லன் நகரைச் சேர்ந்தவர் வசூல்ராஜா என்ற ராஜா, 38; 'ஏபிளஸ்' ரவுடி. இவர் மீது, கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், அடிதடி என, காஞ்சிபுரம் நகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கத்தியால் வெட்டு
இந்நிலையில், திருக்காலிமேடு ரேஷன் கடை அருகே, நேற்று மதியம் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். மதுபாட்டில்கள் வாங்கி வரச்சொல்லி, உடன் இருந்த நண்பர்களை அனுப்பினார்.வசூல்ராஜா தனியாக இருப்பதை அறிந்து, இரண்டு இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த ஐந்து பேர் கும்பல், கைவசம் இருந்த நாட்டு வெடிகுண்டை, அவர் மீது வீசியது.இதில் பதற்றமடைந்து, நிலை தடுமாறி விழுந்த வசூல்ராஜாவின் முகம், உடலின் பல பாகங்களில் சரமாரியாக கத்தியால் வெட்டினர். படுகாயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து, அங்கேயே இறந்தார். மர்ம கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றது.தகவலறிந்த காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம், டி.எஸ்.பி., சங்கர்கணேஷ் மற்றும் காஞ்சி தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு வந்தனர். தடயவியல் நிபுணர்கள், சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.தனிப்படை
போலீசார் கூறியதாவது:திருக்காலிமேடு வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், ஸ்கூட்டியில் வாலிபர் ஒருவர் செல்வதும், மற்றொரு வாலிபர் அதன் பின்னால் ஓடுவதும் மட்டும் தெரிந்தது. மற்றவர்கள் பற்றிய காட்சிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.டி.எஸ்.பி., சங்கர்கணேஷ் தலைமையில், இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மர்ம கும்பலை தேடி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.சமீப ஆண்டுகளில், திருக்காலிமேடில் கொலை ஏதும் நடக்காமல் இருந்த நிலையில், மீண்டும் ஒரு கொலை பட்டப்பகலிலேயே நடந்ததால், அப்பகுதியில் வசிப்போர் அச்சமடைந்துள்ளனர்.
வசூல்ராஜா ரவுடியானது எப்படி?
கொலை செய்யப்பட்ட வசூல்ராஜா இளம்வயதில், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டு, அவர்களுடன் சுற்றி வந்துள்ளார். பின், ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகளுடன் பழக்கம் ஏற்பட்டு, அடிதடி பிரச்னைகளில் ஈடுபட்டார். கடந்த 2012ல், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் இவர் முக்கிய குற்றவாளி என, போலீசார் தெரிவிக்கின்றனர்.
திருக்காலிமேடு மக்கள் அச்சம்
காஞ்சிபுரம், திருக்காலிமேடிற்கு சாராயம் விற்கும் இடம் என்ற பெயர், முந்தைய ஆண்டுகளில் இருந்தது. கொலை, கொலை முயற்சி போன்ற சம்பவங்கள் பல நடந்ததால், 2014ல், அப்போதைய எஸ்.பி., விஜயகுமார், புறக்காவல் நிலையம் ஒன்றை அமைத்தார். ஆனால், நாளடைவில் அந்த புறக்காவல் நிலையம் மாயமானது. சமீப ஆண்டுகளில், திருக்காலிமேடில் கொலை ஏதும் நடக்காமல் இருந்த நிலையில், மீண்டும் ஒரு கொலை பட்டப்பகலிலேயே நடந்ததால், அப்பகுதியில் வசிப்போர் அச்சமடைந்துள்ளனர்.
முன்விரோதத்தில் நடந்த கொலை?
ராஜாஜி சந்தையை சுற்றிய இடங்களில், ரவுடி மாமூலை யார் வசூலிப்பது என்பதில், பிரபல ரவுடி பொய்யாக்குளம் தியாகு, வசூல்ராஜா இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ரயில்வே சாலையில் ராஜி என்பவரை, வசூல்ராஜா கொலை செய்தார். அதற்கு பதிலாக, வசூல்ராஜாவின் கூட்டாளி மணிகண்டன் என்பவரை, பொய்யாக்குளம் தியாகு கொலை செய்தார். இருவருக்கும் இடையே கொலை, கொலை முயற்சி சம்பவங்கள் அடிக்கடி நடந்திருக்கின்றன. அதனால், பொய்யாக்குளம் தியாகு கூட்டாளிகள், வசூல்ராஜா கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர்.