டூ - வீலரில் சென்றவர் அரசு பஸ் மோதி பலி
சுங்குவார்சத்திரம்:சுங்குவார்சத்திரம் அடுத்த, மதுரமங்கலம், எம்பார் கோவில் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 35; கட்டுமான கூலித் தொழிலாளியான இவர், நேற்று காலை, சக தொழிலாளி முருகன், 48, என்பவருடன், 'ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வேலைக்கு சென்றுள்ளார்.அப்போது, திருமங்கலம் பாரதியார் சாலையில் உள்ள நான்கு முனை சந்திப்பில் வரும்போது, பின்னால் வந்த அரசு பேருந்து, ராஜேஸ்வரி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், தடுமாறி விழுந்த ராஜேஸ்வரியின் மீது, பேருந்தின் இடது முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியது.ராஜேஸ்வரியை அருகிலிருந்தோர் மீட்டு, '108' ஆம்புலன்ஸ் சேவை வாகனம் வாயிலாக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜேஸ்வரி உயிரிழந்தார். இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற முருகன், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனரை கைது செய்து விசாரிக்கின்றனர்.