சென்னை: சென்னையில் நேற்று முடிந்த அகில இந்திய ஒய்.எஸ்.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில், ஐந்து விக்கெட் வித்தியாசத்தில், ப்ரேயர் இன்டர்நேஷனல் லாஜிஸ்டிக்ஸ் அணி வெற்றி பெற்றது. சென்னையில் உள்ள, 'யங் ஸ்டார்ஸ்' கிரிக்கெட் அகாடமி சார்பில், ஒய்.எஸ்.சி.ஏ., கோப்பை, 54வது அகில இந்திய கிரிக்கெட் போட்டி, ஒரு மாதமாக நடந்தது.இந்த போட்டிகள் மயிலாப்பூர், பல்லாவரம்உள்ளிட்ட பல்வேறு மைதானங்களில் நடந்தன. இதில், நாடு முழுதும் இருந்து, தனியார் நிறுவனம் மற்றும் கல்லுாரி, கிளப் என, மொத்தம் 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டிகள், போரூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள லாலாஜி மெமோரியல் ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.இதில், ப்ரேயர் இன்டர்நேஷனல் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சோசியல் சி.சி., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சோசியல் சி.சி., அணி, 23 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 70 ரன்களில் ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய, ப்ரேயர் இன்டர்நேஷனல் லாஜிஸ்டிக்ஸ் அணி, 12.1 ஓவர்களில் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஐந்து விக்கெட் இழந்து, 74 ரன்களை எடுத்தது.இதை தொடர்ந்து, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ப்ரேயர் இன்டர்நேஷனல் லாஜிஸ்டிக்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது.