காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாவட்ட அரசு மருத்துவமனை, தலைமை அஞ்சலகம் ஒட்டியுள்ள பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இதில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தலைமை அஞ்சலகம் நுழைவாயில் பகுதியில் கால்வாய்க்கு இணைப்பு வழங்கப்படாமலும், மேல்தளம் அமைக்கப் படாமலும் இருந்தது.இதனால், மழைக்காலத்தில் இப்பகுதியில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கால்வாய் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில், 1 மீட்டர் அகலமுள்ள கால்வாயை, 1.20 மீட்டர் நீளத்திற்கு அகலப்படுத்தி கான்கிரீட் தளம் அமைக்கவும், கால்வாய்க்கு இணைப்பு இல்லாத பகுதியில் இணைப்பு ஏற்படுத்தவும், மொத்தம் 600 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதில், தலைமை அஞ்சல் அலுவலகம் ஒட்டியுள்ள அஞ்சலக ஏ.டி.எம்., மையத்திற்கு செல்லும் நுழைவாயில் பகுதியில், கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இருப்பினும், ஏ.டி.எம்., மையத்திற்கு வாடிக்கையாளர்கள் செல்ல தற்காலிக பாதை அமைக்கவில்லை.இதனால், அஞ்சலகத்தில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அவசர, அவசிய தேவைக்கு அஞ்சலக ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க முடியாத சூழல் உள்ளது.எனவே, அஞ்சலக ஏ.டி.எம்., மையத்திற்கு செல்வதற்காக தற்காலிக பாதை அமைக்கவும், அப்பகுதியில் மழைநீர் கால்வாய் கட்டுமான பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.